1)இந்திய மொழிக்குடும்பம் பற்றி விளக்குக.
இந்திய மொழிக்குடும்பங்கள்
மொழி
மொழி என்பது ஒரு கருத்துப் பரிமாற்றக் கருவி. ஒருவருடைய கருத்தைப் பிறர் அறிந்து கொள்ள இந்த மொழி பயன்படுகிறது.
மொழிக்குடும்பம்
இலக்கணம், தொடரியல் அமைப்பு, அடிச் சொற்களின் ஒப்புமை, மொழிநிலை போன்றவற்றில் ஒன்றோடு ஒன்று தொடர்புடைய மொழிகளை இணைத்து ஒரு மொழிக் குடும்பமாகக் குறிப்பிடுவர்.
இந்திய மொழிகளின் வரலாறு
இந்தியா, 'மொழிகளின் காட்சியகம்' என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில் 1652 மொழிகள் பேசப்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவை மொழிகளின் ஹாட்ஸ்பாட் என்கிறார் டேவிட் ஹாரில். ஒரிசா 'மொழிகளின் சுரங்கம்' என்று அழைக்கப்படுகிறது.
இந்திய மொழிக்குடும்பங்கள்
இந்தியாவில் வழங்கும் மொழிக் குடும்பங்கள் மொத்தம் நான்கு. அவை
1) ஆரியம் (அ) இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பம்
2) முண்டா (அ) கோல் (அ) ஆஸ்ட்ரோ மொழிக்குடும்பம்
3)சீன- திபெத்திய மொழிக்குடும்பம்
4) திராவிட மொழிக்குடும்பம்
1. இந்தோ- ஆரிய மொழிகள்
இந்தோ- ஈரானிய மொழியின் கிளைமொழியே இந்தோ -ஆரிய மொழிகள். இம்மொழிக்குடும்பத்தில் 209 மொழிகள் உள்ளன. இம்மொழிகளை 900 மில்லியன் மக்கள் பேசுகின்றனர். சமஸ்கிருதம், பாலி, பஞ்சாபி, மகத மொழிகளான அசாமி, வங்காளி, நாகரி, பீகார் மொழிகளான போஜ்புரி, மைதிலி, மகாஹி போன்ற மொழிகள் இம்மொழிக்குடும்பத்தைச் சார்ந்தவை.
பேசப்படும் பகுதிகள்
வடஇந்தியப் பகுதிகளில் பேசப்படுவது இந்தி மொழி . பஞ்சாப், சிந்து, குஜராத்தின் வடபகுதி, மஹாராட்டிரம், ஒரிசா, வங்களாம் , தெற்கு நேபாளம் ஆகிய பகுதிகளில் வழங்கும் பேச்சுமொழியே இந்துஸ்தானி.
சமஸ்கிருதம்
இந்தியாவின் பழமையான மொழிகளில் ஒன்று சமஸ்கிருதம். இதன் வேறு பெயர்கள் வடமொழி, தேவபாஷை என்பதாகும். சமஸ்கிருதம் தேவநாகரி எழுத்துகளால் எழுதப்படுகிறது. இம்மொழி 2015ல் செம்மொழித் தகுதி பெற்றது.
பாலிமொழி
பௌத்த சமயத்தின் பழம்பெரும் நூல்கள் பாலிமொழியில் எழுதப்பட்டுள்ளன. புத்தரின் மொழி பாலி. பாலி என்பதன் பொருளாக ஆரம்பகால பௌத்தர்கள் 'புத்தகங்களின் தொடர்பு' என்று கூறுகின்றனர்.
2)ஆஸ்ட்ரிக் (அ) முண்டா (அ) கோல் மொழிக்குடும்பம்
இம்மொழிக்குடும்பம் தென்கிழக்கு ஆசியா, பசுபிக்தீவுகள், கிழக்கு ஆசியா, மடகாஸ்கர் பகுதிகளில் பேசப்படுகிறது. இம்மொழிகளை பால்கே பெனடிக் 'அழிந்துபோன புரோட்டோ மொழிகள்' என்று அழைக்கிறார்.
முண்டா மொழி
இம்மொழியை நடு இந்திய பகுதிகளில் இருந்து தேயிலைத் தொழிலாளர்களாக வங்காளம், அசாம் போன்றவற்றிற்கு சென்றவர்கள் பேசுகின்றனர். திராவிட மொழிகளுக்குத் தொடர்புடைய மொழியாக முண்டா மொழி இருக்கிறது.
3) சீன- திபெத்திய மொழிகள்
சீன-திபெத்திய மொழிகள் தாய்-சீனம், திபெத்தோ -பர்மியன் என இரண்டு பிரிவுகளாக அமைகிறது. மணிப்புரி, நிவாரி போன்ற மொழிகள் இம்மொழிக்குடும்பத்தைச் சார்ந்தவை.
மணிப்புரி மொழி
இம்மொழி மேதிமொழி, மணிப்புரியம் எனும் வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.
நிவாரி மொழி
இம்மொழி நேபாளத்தில் பேசப்படுகிறது. நிவாரி மொழி தேவநாகரி எழுத்துக்களால் எழுதப்படுகிறது. நேவாரி என்றும் அழைக்கப்படுகிறது.
4)திராவிட மொழிக்குடும்பம்
திராவிடம் என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தியர் குமரிலபட்டர். கால்டுவெல் மொழிகளின் அமைப்பு, வேர்ச்சொல் இவற்றை அடிப்படையாகக் கொண்டு திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை 1856ல் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார். திராவிட மொழிக்குடும்பத்தை அவை பேசப்படும் பகுதிகளை அடிப்படையாகக் கொண்டு தென் திராவிட மொழிகள், நடு திராவிட மொழிகள், வட திராவிட மொழிகள் என்று மூவகையாகப் பிரிக்கலாம்.
2) திராவிட மொழிக்குடும்பத்தின் பிரிவுகளை விளக்குக.
திராவிட மொழிக்குடும்பம்
திராவிடம் என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தியர் குமரிலபட்டர். கால்டுவெல் மொழிகளின் அமைப்பு, வேர்ச்சொல் இவற்றை அடிப்படையாகக் கொண்டு திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை 1856ல் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார். திராவிட மொழிக்குடும்பத்தை அவை பேசப்படும் பகுதிகளை அடிப்படையாகக் கொண்டு தென் திராவிட மொழிகள், நடு திராவிட மொழிகள், வட திராவிட மொழிகள் என்று மூவகையாகப் பிரிக்கலாம்.
அவை,
1)தென் திராவிட மொழிகள் (9) - பேசப்படும் பகுதிகள்
*தமிழ் - தமிழகம், மலேசியா, சிங்கப்பூர், பிஜித்தீவு, இலங்கை, இந்தோனேசியா, தாய்லாந்து, மொரிசியஸ்
*மலையாளம்- சேரநாடு
*கன்னடம் - கர்நாடகம்
*படகா - நீலகிரி (ஊட்டி, குன்னூர்) * துளு-மைசூர் மாநிலத்தை அடுத்த சந்திரகிரி, கல்யாண்புரி என்ற 2 ஆறுகளுக்கு இடைப்பட்ட பகுதி.
*தோடா- தோடர் பழங்குடிமக்கள் (நீலகிரி)
* கோடா - கோடர் இன மக்கள் (நீலகிரி)
*இருளா -இருளர் மக்கள் (நீலகிரி)
*குடகு (அ)கொடடு - குடகு மலைப்பகுதி மக்களால் பேசப்படுகிறது.
2) நடுதிராவிட மொழிகள்
*தெலுங்கு- குவி கிளை :கோண்டி, கோண்டா,குயி,குவி,பெங்கோ,மண்டா
*கொலமி- நாயக்கி கிளை : நாயக்கி, பர்ஜி, கடபா ஒல்லாரி, கடபா z சில்லூர்
3)வடதிராவிட மொழிகள்
குரூக்,மால்டோ, பிராகுயி.
தென் திராவிட மொழிகள்
தமிழ்
தமிழ்மொழி 2,500 ஆண்டுகள் பழமையான இலக்கியங்களை கொண்டது. தமிழ் என்ற சொல்லின் பொருள் இனிமை, எளிமை, நீர்மை என்பதாகும். இலங்கை, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தமிழ் ஆட்சிமொழியாக உள்ளது. 2004ல் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. 'பக்தியின் மொழி' என்று அழைக்கப்படுகிறது.
மலையாளம்
கேரளாவில் அதிகமாக பேசப்படும் மொழி மலையாளம். மலையாள மொழியை முதலில் ஆராய்ந்தவர் கால்டுவெல்.
கன்னடம்
கர்நாடக மாநிலத்தில் பேசப்படும் மொழி கன்னடம். இம்மொழி 2008ல் செம்மொழித் தகுதி பெற்றது.
துளு (அ) துளுவம்
கர்நாடக மாநிலத்தின் தெற்குப்பகுதி, உடுப்பி, கேரளாவின் காசர்கோடு ஆகிய பகுதிகளில் வாழும் மக்கள் துளு மொழியைப் பேசுகின்றனர்.
நடுதிராவிட மொழிகள்
தெலுங்கு (தெலுகு)
ஆந்திரம், தெலுங்கானா மாநிலங்களில் பேசப்படுகிறது.இந்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 22 மொழிகளுள் தெலுங்கு மொழியும் ஒன்று.
கோண்டி
மத்திய பிரதேசம், ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் இம்மொழி பேசப்படுகிறது.
கோண்டா
ஆந்திர பிரதேசத்தின் எல்லைப் பகுதிகளான விஜயநகரம், ஸ்ரீசைலம், கோதாவரி, ஒரிசா போன்ற பகுதிகளில் வாழும் பழங்குடியினர் இம்மொழி பேசுகின்றனர்.
கூயி
இம்மொழி ஒரிசாவில் பேசப்படுகிறது. கோண்டு இன மக்களால் பேசப்படுகிறது.
பெங்கோ
இது ஒரு தனிமொழி என்று பேராசிரியர் பரோ கூறுகிறார். 1300 பேர் இம்மொழி பேசுகின்றனர்.
வடதிராவிட மொழிகள்
பிராகுயி
பலுச்சிஸ்தான் பகுதியில் பேசப்படுகிறது. இந்தியாவைக் கடந்து பேசப்படும் மொழி இதுவாகும்.
குரூக்
'ஒரோவன்' என்பது இம்மொழியின் வேறு பெயராகும். பீகார், அசாம், ஒரிசா, ஜார்கண்ட், வங்காளதேசம் போன்ற பகுதிகளில் இம்மொழி பேசப்படுகிறது.
மால்டோ
'இராஜ்மகால்' என்றும் இம்மொழி அழைக்கப்படுகிறது. தேவநாகரி எழுத்துக்களால் எழுதப்படுகிறது.
3) தமிழ் ஒரு செம்மொழி நிறுவுக.
தமிழ் ஒரு செம்மொழி
தமிழ் மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இலக்கிய வளம் மிக்க மொழி. காலத்தால் மூத்த தமிழ்மொழி தனித்தன்மையின் காரணமாகச் செம்மொழியாகத் திகழ்கிறது.
செம்மொழித் தகுதிபாடுகள்
1.தொன்மை, 2. பிறமொழித் தாக்கமின்மை, 3. தாய்மை, 4. தனித்தன்மை, 5.இலக்கிய வளம், இலக்கணச் சிறப்பு, 6. பொதுமைப் பண்பு, 7.நடுவுநிலைமை, 8.பண்பாடு,கலை பட்டறிவு வெளிப்பாடு, 9.உயர்சிந்தனை, 10. கலை இலக்கியத் தனித்தன்மை வெளிப்பாடு, 11.மொழிக் கோட்பாடு எனப் பதினொரு தகுதிகளை வரையறுத்துள்ளனர்.
1.தொன்மை
முதல் மாந்தன் தோன்றிய இடம் குமரிக்கண்டம்.அவன் பேசிய மொழி தமிழ்மொழி என்கின்றனர் ஆய்வாளர். அக்குமரிக் கண்டத்தில் முதல், இடைத் தமிழ்ச்சங்கங்கள் அமைத்துத் தமிழர் மொழியை வளர்த்தனர். இந்நிலப்பகுதி கடற்கோளால் அழிந்ததால் தமிழ்ச் சான்றோரால் மூன்றாவது தமிழ்ச்சங்கம் இன்றைய மதுரையில் தோற்றுவிக்கப்பட்டது. உலகம் தோன்றிய போதே தோன்றிய தமிழை அதன் தொன்மையைக் கருதி 'என்றுமுள தென்தமிழ்' என்பார் கம்பர்.
2. பிறமொழித் தாக்கமின்மை
ஆங்கிலத்தில் எண்ணற்ற பிறமொழிச் சொற்கள் கலந்துள்ளன. பிறமொழிச் சொற்களை நீக்கினால் பல மொழிகள் இயங்காது. தமிழ் ஒன்றே பிறமொழிச் சொற்களை நீக்கினாலும் இனிதின் இயங்கவல்லது.
3.தாய்மை
தமிழ்மொழி திராவிட மொழிகளான கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு முதலிய மொழிகளுக்குத் தாய்மொழியாகத் திகழ்கிறது. 1800 மொழிகளுக்கு வேர்ச்சொற்களையும் 180 மொழிகளுக்கு உறவுப்பெயர்களையும் தந்துள்ளது தமிழ். ஆதலால், உலக மொழிகளுக்கெல்லாம் தாய்மொழியாகத் திகழ்கிறது தமிழ் என்பது பெருமைக்குரிய ஒன்று.
4.தனித்தன்மை
இயல், இசை, நாடகம் என்னும் முப்பெரும் பிரிவுகளைக் கொண்டது தமிழ். தமிழர் வாழ்வை அகம், புறம் எனப் பகுத்து வாழ்வியலுக்கு இலக்கணம் வகுத்தனர். உலகில் வேறு எம்மொழியும் பொருளிலக்கணம் கூறவில்லை. இது தமிழின் தனித்தன்மைகளுள் ஒன்று.
5.இலக்கிய வளம் இலக்கணச் சிறப்பு
உலக இலக்கியங்களுள் முதன்மை பெற்றுள்ளவை சங்க இலக்கியங்கள். இவற்றின் மொத்த அடிகள் 26,350. மாக்சுமுல்லர், தமிழே மிகவும் பண்பட்ட மொழி என்றும், அது தனக்கே உரிய இலக்கியச் செல்வங்களைப் பெற்றிருக்கும் மொழி என்றும் பாராட்டியிருக்கின்றார். தமிழ்மொழி இக்கண அமைப்பானது தனிச்சிறப்புடையது. இலக்கண நூல்களுள் மிகப் பழமையானது தொல்காப்பியம்.
6.பொதுமைப் பண்பு
தமிழர் தமக்கென வாழாப் பிறர்க்குரியாளராக வாழ்ந்தனர். ஒன்றே குலம் எனப் போற்றினர். தீதும் நன்றும் விளைவது அவரவர் செயலால் என்றுணர்ந்து வாழ்ந்தனர். செம்புலப் பெயல்நீர்போல அன்புள்ளம் கொண்டனர். இவ்வாறான பொதுமை அறங்களைத் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. அவை உலகத்தால் போற்றப்படுகின்றன. திருக்குறள், மாந்தர் இனத்திற்கே வாழ்வியல் நெறிமுறைகளை வகுத்தளித்தது.
7.நடுவுநிலைமை
சங்க இலக்கியங்கள் இனம், மொழி, மதம் கடந்தது இயற்கையோடு இயைந்தவை. உலகத்தார் ஏற்கும் பொதுக் கருத்துகள் உடையவை. மக்கள் சிறப்புடன் வாழ ஏற்ற கருத்துகளை மொழிபவை.
8.பண்பாடு கலை பட்டறிவு வெளிப்பாடு
சங்கப் படைப்புகள் வெறுங்கற்பனைப் படைப்புகளல்ல. அவை மனிதப் பட்டறிவின் முழு வெளிப்பாடுகள். அறத்தொடு நிலையாய் நிற்பன. அவை பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல், யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம், பிறன்மனை நோக்காப் பேராண்மை முதலிய பண்பாட்டு நெறிமுறைகளையும் வெளிப்படுத்துகின்றன.
9.உயர் சிந்தனை
யாதும் ஊரே யாவரும் கேளிர் என உலக மக்களை ஒன்றிணைத்து உறவுகளாக்கிய உயர்சிந்தனை மிக்கது புறநானூறு. 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என அறத்தைத் திருக்குறள் உலகுக்கு எடுத்துரைக்கிறது.
10. கலை இலக்கியத் தனித்தன்மை வெளிப்பாடு
தமிழ்ச் சான்றோர் மொழியை இயல், இசை, நாடகம் எனப் பிரித்து வளமடையச் செய்தனர். மேலும் எளிய குடிமகனையும் குடிமகளையும் காப்பியத் தலைவர்களாக்கிக் காப்பியம் படைத்தனர். சிலப்பதிகாரம் அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்னும் அறநெறியை உலகாள்வோருக்கு உணர்த்துகிறது. இந்நூல் கூறும் கலைநுட்பச் செய்திகள் சங்ககாலத் தமிழர்களின் கலை இலக்கியத் தனித்தன்மைகளுக்குச் சான்றாகத் திகழ்கின்றன.
11.மொழிக் கோட்பாடு
தொல்காப்பியர் கூறும் எழுத்துப் பிறப்புமுறைகள் மொழி நூலாரையே வியப்பில் ஆழ்த்துகின்றன. 'இன்றைய மொழியியல் வல்லுநர்கள் பேணிப் பின்பற்றத்தக்க வழிமுறைகளைத் தொல்காப்பியம் கூறுகின்றது' என்பார் முனைவர் எமனோ.
இவ்வாறான சிறப்புகளை உடைய தமிழ்மொழிக்குச் செம்மொழி தகுதி வழங்கப்பட வேண்டும் என்று 1901 ல் தொடங்கி 2004 வரை வலியுறுத்தப்பட்டு வந்தது. 2004 ம் ஆண்டு நடுவணரசு தமிழைச் செம்மொழியாக அறிவித்து தமிழுக்கு செம்மொழி தகுதி வழங்கியது. (12.10 2004)
4)தமிழ் செவ்விலக்கியங்கள் பற்றி எழுதுக.
41 செவ்வியல் நூல்கள்
இலக்கணம்
தொல்காப்பியம்
இறையனார் அகப்பொருள்
சங்க இலக்கியம்
எட்டுத்தொகை
நற்றிணை
குறுந்தொகை
ஐங்குறுநூறு
பதிற்றுப்பத்து
பரிபாடல்
கலித்தொகை
அகநானூறு
புறநானூறு
பத்துப்பாட்டு
திருமுருகாற்றுப்படை
பொருநராற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை
பெரும்பாணாற்றுப்படை
முல்லைப்பாட்டு
மதுரைக்காஞ்சி
நெடுநல்வாடை
குறிஞ்சிப்பாட்டு
பட்டினப்பாலை
மலைபடுகடாம்
பதினெண் கீழ்க்கணக்கு
நாலடியார்
நான்மணிக்கடிகை
இன்னா நாற்பது
இனியவை நாற்பது
கார் நாற்பது
களவழி நாற்பது
ஐந்திணை ஐம்பது
ஐந்திணை எழுபது
திணைமொழி ஐம்பது
திணைமாலை நூற்றைம்பது
பழமொழி
சிறுபஞ்சமூலம்
திருக்குறள்
திரிகடுகம்
ஆசாரக்கோவை
முதுமொழிக்காஞ்சி
ஏலாதி
கைந்நிலை
காப்பியம்
சிலப்பதிகாரம்
மணிமேகலை
சிற்றிலக்கியம்
முத்தொள்ளாயிரம்
சங்க இலக்கியங்கள் தமிழ் செவ்விலக்கியங்கள் என்று அழைக்கப்படுகிறது.
எட்டுத்தொகையில் அகம் சார்ந்த நூல்கள்
நற்றிணை
குறுந்தொகை
ஐங்குறுநூறு
கலித்தொகை
அகநானூறு
எட்டுத்தொகையில் புறம் சார்ந்த நூல்கள்
பதிற்றுப்பத்து,புறநானூறு
எட்டுத்தொகையில் அகம், புறம் சார்ந்த நூல்
பரிபாடல்
பத்துப்பாட்டில் அகம் சார்ந்த நூல்
முல்லைப்பாட்டு,குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை
பத்துப்பாட்டில் புறம் சார்ந்த நூல் மதுரைக்காஞ்சி
பத்துப்பாட்டில் அகம், புறம் சார்ந்த நூல்
நெடுநல்வாடை
பத்துப்பாட்டில் உள்ள ஆற்றுப்படை நூல்கள்
திருமுருகாற்றுப்படை,
பொருநராற்றுப்படை,
சிறுபாணாற்றுப்படை,
பெரும்பாணாற்றுப்படை,
கூத்தராற்றப்படை
5) தமிழ்க் காப்பியங்கள் குறித்து எழுதுக.
தமிழ்க் காப்பியங்கள்
தனிப் பாடல்களை அடுத்துத் தமிழில் தொடர்நிலை செய்யுள் அதாவது காப்பியங்கள் தோன்றலாயின. தொடக்க காலக் காப்பியங்கள் ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் என இருவகைப் படுத்தப்பட்டுள்ளன.
ஐம்பெரும் காப்பியங்கள்,ஐஞ்சிறு காப்பியங்கள்
சிலப்பதிகாரமும் மணிமேகலையும் தமிழில் தோன்றிய முழுமுதற் காப்பியங்கள் ஆகும். பிற எம்மொழியிலிருந்தும் தழுவியோ மொழிபெயர்த்தோ எழுதப் பெறாதது இவை.
சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகிய பெருங்காப்பியங்களும், உதயணகுமார காவியம், நாககுமார காவியம், யசோதரகாவியம், நீலகேசி, சூளாமணி ஆகிய ஐஞ்சிறுகாப்பியங்களும், பெருங்கதையும் வடமொழி, பாலி, பிராகிருதம் போன்ற மொழிகளில் அமைந்த காவியங்களைத் தழுவியும் மொழிபெயர்த்தும் எழுதப் பட்டனவாகும்.
இவை மொழி பெயர்ப்பும், தழுவலுமாக அமைந்த போதிலும் தமிழில் தோன்றிய காப்பியம் போலவே தமிழ் நடையும், பெயரமைப்பும் சொல்லாட்சியும் பெற்று அமைந்துள்ளன.
காப்பியங்களின் சமயங்கள்
மணிமேகலை பௌத்தத்தைப் போற்றும் நிலையில் எழுந்தது. சீவகசிந்தாமணி சமணம் பரப்ப எழுந்தது ; வளையாபதி சமண சமயத்தது. குண்டலகேசி பௌத்தத்தைப் போற்றுவது.
ஐஞ்சிறு காப்பியங்கள் அனைத்தும் சமண சமயத்தனவாகும்.
6)பக்தி இலக்கியம் பற்றி எழுதுக.
பக்தி இலக்கியம்
தமிழைப் ‘பத்திமையின் மொழி’ என்று சொல்வதற்கு ஏற்பப் பக்தி இலக்கியம் சிறப்புற்றது. பரிபாடல் காலத்திலிருந்து பாரதியாரின் கண்ணன் பாட்டு வரை, பல்வகை இசைத்தமிழ் மரபாக இது வளர்ந்தது.
காரைக்காலம்மையார், சேரமான் பெருமாள், முதலாழ்வார் மூவர் தொடங்கி கி.பி. 7, 8, 9-ஆம் நூற்றாண்டளவில் அடித்த பக்திப்பேரலைகள் பலவாகும். சமண பௌத்த பக்திப் பாடல்களும், சைவ வைணவப் பாசுரங்களும் ஒலியும் எதிரொலியுமாகப் பரவிப் பெருகின. பன்னிரு திருமுறையும் நாலாயிர திவ்வியப் பிரபந்தமும் பக்திப் பேழைகளாகும். நாயன்மார்கள், ஆழ்வார்களைத் தொடர்ந்து அருணகிரிநாதர், பட்டினத்தார், தாயுமானவர், வள்ளல் இராமலிங்கர் என இப்பக்தி வெள்ளம் தமிழ் இலக்கிய வரலாற்றில் உயிர் ஆறாகப் பெருக்கெடுத்துப் பாய்ந்தது. இசுலாமிய, கிறித்தவ இசைப் பாசுரங்களும் ஈடுஇணையற்ற எல்லைகளை எட்டின. நாட்டுப்பாடல் மரபுகளை ஏற்று மாணிக்கவாசகர் காலம் முதல் இத்துறை பெற்ற பல்வேறு வளர்ச்சிப் படிகளும் வகைமைகளும் பலவாகும்.
அப்பரடிகள் தாண்டகம் என்ற விருத்த வகையையும் பாடியதால் தாண்டகவேந்தர் என்றும் அழைக்கப்பட்டார்.
பன்னிரு திருமுறைகளைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி
நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தைத் தொகுத்தவர் நாதமுனிகள்
சைவ சமயக் குரவர்கள் - திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்,சுந்தரர், மாணிக்கவாசகர்
நாயன்மார்கள் எண்ணிக்கை 63 ஆகும்.
ஆழ்வார்களின் எண்ணிக்கை 12 ஆகும்.
7) பாரதியார், பாரதிதாசன் ஆகியோரின் தமிழ்ப்பணி குறித்து எழுதுக.
பாரதியார்
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்க வரலாற்றில் கவிதைத் துறையில் குறிப்பிடத்தக்க இருவர் பாரதியும்
பாரதிதாசனும் ஆவர். இவ்விருவரையும் தமிழ் இலக்கிய வானின் நிலவாகவும் கதிராகவும் ஒருவாறு கொள்ளலாம்.
எட்டயபுரத்தில் கி. பி. 1882ஆம் ஆண்டு பிறந்த பாரதியார், தம் கவிப்புலமை காரணமாகப் “பாரதி' என்று சிறுவயதிலேயே அழைக்கப் பெற்றார்.
கவிஞர், கதையாளர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர், இதழியலாளர், அரசியலாளர், சொற்பொழிவாளர், சமூகச் சீர்திருத்தவாதி, பல்சமய ஒருங்கிணைப்பாளர், தன்னம்பிக்கையாளர், நேர்முக உளவியலாளர், உள்ளிட்டப் பல்வேறு திறன்களுக்குச் சொந்தக்காரர் பாரதியார்.
இந்தியா, சக்கரவர்த்தினி, பாலபாரதா, விஜயா ஆகிய இதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றினார்.
1918-ஆம் ஆண்டு புதுச்சேரியிலிருந்து கடலூருக்கு வந்த பாரதியார் ஆங்கிலேயரால் கைது செய்யப்பட்டார். பின்னர் கடையத்தில் ஓராண்டு வாழ்ந்தார். மீண்டும் சென்னை திரும்பி சுதேசமித்திரனில் உதவி ஆசிரியர் பணியை ஏற்றார். அங்கு 1921 செப்டம்பர் 11 வரை வாழ்ந்த பாரதியார் செப்டம்பர் 12 அதிகாலை உடல்நலக் குறைவு காரணமாக இறந்தார்.
பாரதிதாசன்
பாரதிதாசன் 29 ஏப்ரல் 1891 அன்று பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்த பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் கனகசுப்புரத்தினம் ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார். பாரதிதாசன், தம் எழுச்சி மிக்க எழுத்துகளால், "புரட்சிக் கவிஞர்" என்றும், "பாவேந்தர்" என்றும் பரவலாக அழைக்கப்படுபவர்.
பாரதிதாசன் தன் எண்ணங்களைக் கவிதை, இசைப்பாடல், நாடகம், சிறுகதை, புதினம், கட்டுரை ஆகிய வடிவங்களில் வெளியிட்டார். அவற்றுள் சில:
இருண்ட வீடு, குடும்ப விளக்கு, சேரமான் காதலி,பிசிராந்தையார்.
பிசிராந்தையார் நாடகம் சாகித்திய அகாதமி விருது பெற்றது.
No comments:
Post a Comment