தங்கத்தாரகையே செந்தாமரையே என அழகைப் போற்றும் நிலையை மறப்போம்
தரணியை ஆளப் பிறந்தோம் நாம் என துணிவைத் துணையாய் கொண்டு
தூக்கம் தொலைத்து இரும்பென இதயம் கொண்டு இலக்கை நோக்கி
எடுத்து வை உன் முதல் அடியை
நீ பிறந்தபோது பெண்பிள்ளையென தூற்றியோர்
உன் பெருமை கண்டு போற்றட்டும்
நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும்
உன்னை ஏளனம் செய்வோருக்கு இடிபோல் இருக்கட்டும்
ஏன் பெண்ணாய் பிறந்தேனென உனை சிந்திக்க வைத்த
சமூகத்தை உன் அறிவால் தட்டி எழுப்பிடு
ஆணும் பெண்ணும் சமமென போற்றும்
புதிய சமூதாயத்தை கட்டி எழுப்பிடு
சமைந்தவுடன் சமயறைக்குள் முடக்கப்படுவதற்கல்ல
உன் கனவுகள் உரக்கச் சொல் உலகுக்கு
சோதனை கடந்து சாதனை புரியவந்தோம்
புதிய சரித்திரம் படைக்க வந்தோம் என சொல்
பெற்றோம் வளர்த்தோம் கட்டிக்கொடுத்தோம் என்ற
பழைய மொழிகளை விலக்கச் சொல்
பெண்ணியம் பேசுவோரை ஏசிடும் மக்களுக்கு
ஆணும் பெண்ணும் சமமென உணர்த்தவே
அர்த்தநாரீஸ்வரராய் ஈசன் தோன்றினார் என்று விளக்கி சொல்
பெண்ணியம், பெண் சுதந்திரம் என்பது ஆண்கள் செய்யும் தீய செயல்களைத் தேடிதேடி
செய்வதிலும் உடை சுதந்திரத்திலும் இல்லை என்று எடுத்து சொல் பெண்ணுலகுக்கு
ஆண்களுக்கு சரிநிகர் சமானமாய் அனைத்து துறைகளிலும்
சாதிக்க சமமான வாய்ப்புகள் வழங்கப்படுவதே
உண்மையான பெண்சுதந்திரம் என இப்பாருக்கு பறைசாற்றி இலக்கை அடைய உழைக்கச் சொல்
உலகமே உன்னை எதிர்த்தாலும்
ஊரே உன் உரிமை மறுத்தத்தாலும்
உன் குரல் போர் முரசாய் பாரினில் ஒலிக்கட்டும்
பெண்மை என்றால் பொறுமை என அமைதி காத்தது போதும் .....
No comments:
Post a Comment