Monday, August 14, 2023

இந்திய மொழிக்குடும்பங்கள்

இந்திய மொழிக்குடும்பங்கள்

மொழி

    மொழி என்பது ஒரு கருத்துப் பரிமாற்றக் கருவி. ஒருவருடைய கருத்தைப் பிறர் அறிந்து கொள்ள இந்த மொழி பயன்படுகிறது.  

மொழிக்குடும்பம் 

      இலக்கணம், தொடரியல் அமைப்பு, அடிச் சொற்களின் ஒப்புமை, மொழிநிலை போன்றவற்றில் ஒன்றோடு ஒன்று தொடர்புடைய மொழிகளை இணைத்து ஒரு மொழிக் குடும்பமாகக் குறிப்பிடுவர். உலக மொழிகளை எட்டு மொழிக் குடும்பங்களாகப் பிரித்துள்ளனர்.

இந்திய மொழிகளின் வரலாறு 

    இந்தியா, 'மொழிகளின் காட்சியகம்' என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில் 1652 மொழிகள் பேசப்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவில் பேசப்படும் மொழிகளில் 70 சதவீதம் இந்தோ- ஐரோப்பிய மொழிக்குடும்பத்தைச் சார்ந்தது. 22 சதவீதம் திராவிட மொழிக்குடும்பத்தைச் சார்ந்த மொழிகள் பேசப்படுகின்றன. இந்தியாவை மொழிகளின் ஹாட்ஸ்பாட் என்கிறார் டேவிட் ஹாரில். ஒரிசா 'மொழிகளின் சுரங்கம்' என்று அழைக்கப்படுகிறது.

இந்திய மொழிக்குடும்பங்கள்

     இந்தியாவில் வழங்கும் மொழிக் குடும்பங்கள் மொத்தம் நான்கு. அவை

 1) ஆரியம் (அ) இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பம்

2) முண்டா (அ) கோல் (அ) ஆஸ்ட்ரோ மொழிக்குடும்பம்

3)சீன- திபெத்திய மொழிக்குடும்பம்

4) திராவிட மொழிக்குடும்பம்

1. இந்தோ- ஆரிய மொழிகள்

இந்தோ- ஈரானிய மொழியின் கிளைமொழியே இந்தோ -ஆரிய மொழிகள். இம்மொழிக்குடும்பத்தில் 209 மொழிகள் உள்ளன. இம்மொழிகளை 900 மில்லியன் மக்கள் பேசுகின்றனர். சமஸ்கிருதம், பாலி, பஞ்சாபி, மகத மொழிகளான அசாமி, வங்காளி, நாகரி, பீகார் மொழிகளான போஜ்புரி, மைதிலி, மகாஹி போன்ற மொழிகள் இம்மொழிக்குடும்பத்தைச் சார்ந்தவை பிற்கால இந்தோ ஆரிய மொழிகளை ஆறு பிரிவுக்குள் அடக்க முடியும்.

அவை:

1)வடமேற்கு மொழிகள்: மேற்கு பஞ்சாபி, சிந்தி 

2)தெற்குப் பகுதி மொழிகள் : மராத்தி, கொங்கணி 

3)கிழக்குப்பகுதி மொழிகள்: ஒரியா, வங்காளி, அசாமி, மைதிலி,மகஹி,போஜ்புரி 

4)கிழக்கு நடுப்பகுதி மொழிகள்: கோசா, அவதி 

5)நடுப்பகுதி மொழிகள்: இந்தி,கரிபோலி, உருது, பங்கரு, கிழக்கு பஞ்சாபி, ராஜஸ்தானி, குஜராத்தி, சௌராஷ்டிரி 

6)வடக்கு (அ) இமயமலை மொழிகள் கொர்காலி,நேபாளி, கர்வாலி 

பேசப்படும் பகுதிகள்

        வடஇந்தியப் பகுதிகளில் பேசப்படுவது இந்தி மொழி . பஞ்சாப், சிந்து, குஜராத்தின் வடபகுதி, மஹாராட்டிரம், ஒரிசா, வங்களாம் , தெற்கு நேபாளம் ஆகிய பகுதிகளில் வழங்கும் பேச்சுமொழியே இந்துஸ்தானி. தமிழகத்திலும், ஆந்திராவிலும் நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ள சௌராட்டிரர்கள் சௌராட்டிர மொழி பேசுகின்றனர். கோவா, மகாராட்டிர கடற்கரைப் பகுதி ஆகியவற்றில் கொங்கணி மொழி பேசப்படுகின்றது. 

சமஸ்கிருதம் 

    இந்தியாவின் பழமையான மொழிகளில் ஒன்று சமஸ்கிருதம். இதன் வேறு பெயர்கள் வடமொழி, தேவபாஷை என்பதாகும். இது பேசப்படும் மொழி இல்லை. கோவில்களில் மட்டும் பயன்படுத்தப்படுகிறது. சமஸ்கிருதம் தேவநாகரி   எழுத்துகளால் எழுதப்படுகிறது. இந்திய ரூபாய் குறியீடு தேவநாகரி எழுத்து ஆகும். இந்திய அலுவல் மொழிகள் 15ல் இதுவும் ஒன்று. இந்தி, பெங்காளி, குஜராத்தி,மராத்தி, காஷ்மீரி, நேபாளி, ஒரியா, கொங்கணி, மைதிலி, சிந்தி, பஞ்சாபி, உருது ஆகிய மொழிகளின் மூலமொழி சமஸ்கிருதம். இம்மொழி 2015ல் செம்மொழித் தகுதி பெற்றது.

பாலிமொழி

   பௌத்த சமயத்தின் பழம்பெரும் நூல்கள் பாலிமொழியில் எழுதப்பட்டுள்ளன. புத்தரின் மொழி பாலி. பௌத்தத்தின் சமய நூல்கள் பாலிமொழியில் எழுதப்பட்டதாகும். புனிதமொழியாகப் பார்க்கப்பட்டது. இம்மொழி பிராமி எழுத்துக்களால் எழுதப்படுகிறது.  பாலி என்பதன் பொருளாக ஆரம்பகால பௌத்தர்கள் 'புத்தகங்களின் தொடர்பு' என்று கூறுகின்றனர். 1872 ம் ஆண்டு பாலி - ஆங்கில அகராதியை இராபர்ட் சில்டர் வெளியிட்டார்.

2)ஆஸ்ட்ரிக் (அ) முண்டா (அ) கோல் மொழிக்குடும்பம் 

    ஆஸ்ட்ரிக் மொழிகள் ஆஸ்ட்ரோநேசியன், ஆஸ்ட்ரோரியாடிக் என இருபிரிவுகள் உண்டு. இம்மொழிக்குடும்பம் தென்கிழக்கு ஆசியா, பசுபிக்தீவுகள், கிழக்கு ஆசியா, மடகாஸ்கர் பகுதிகளில் பேசப்படுகிறது. 1906ல் வில்ஹெம் ஸ்மித் இம்மொழிக்குடும்பத்தை முன்மொழிந்தார். 20-ம் நூற்றாண்டில் இம்மொழி ஆராய்ச்சி வளர்ச்சிப்பெற்றது. இம்மொழிகளை பால்கே பெனடிக் 'அழிந்துபோன புரோட்டோ மொழிகள்' என்று அழைக்கிறார்.

முண்டா மொழி

    இம்மொழியை நடு இந்திய பகுதிகளில் இருந்து தேயிலைத் தொழிலாளர்களாக வங்காளம், அசாம் போன்றவற்றிற்கு சென்றவர்கள் பேசுகின்றனர். முண்டா மொழியுடன் தொடர்புடைய மொழிகள் சவரா, கடபா ஆகியவை ஆகும். சந்தாலி மொழியை முண்டா மொழி பேசும் 90 சதவீதம் மக்கள் பேசுகின்றனர்.  திராவிட மொழிகளுக்குத் தொடர்புடைய மொழியாக முண்டா மொழி இருக்கிறது. ஹோ, முண்டா மொழிகளில் வாய்மொழி இலக்கியங்கள் நிறைந்துள்ளன.

3) சீன- திபெத்திய மொழிகள்

     சீன-திபெத்திய மொழிகள் தாய்-சீனம், திபெத்தோ -பர்மியன் என இரண்டு பிரிவுகளாக அமைகிறது. பல கிளைமொழிகளைக்கொண்டது. மணிப்புரி, நிவாரி போன்ற மொழிகள் இம்மொழிக்குடும்பத்தைச் சார்ந்தவை.

மணிப்புரி மொழி

    இம்மொழி மேதிமொழி, மணிப்புரியம் எனும் வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இம்மொழி வடக்கு இந்தியா, வங்காளம், மியான்மர், மணிப்பூர் ஆகிய பகுதிகளில் அதிகம் பேசப்படுகிறது. மணிப்புரி இந்திய அலுவல் மொழிகளில் ஒன்று. இம்மொழி 1992 இந்திய ஆட்சிமொழிகளில் ஒன்றாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

நிவாரி மொழி

    இம்மொழி நேபாளத்தில் பேசப்படுகிறது. நிவாரிமொழி தேவநாகரி எழுத்துக்களால் எழுதப்படுகிறது. நேவாரி என்றும் அழைக்கப்படுகிறது. 14 முதல் 18 ம் நூற்றாண்டு வரை நேபாளத்தின் நிர்வாக மொழியாக இம்மொழி இருந்துள்ளது.

4)திராவிட மொழிக்குடும்பம்

    ஆரியர் இந்தியாவில் நுழைவதற்கு முன் இந்தியாவில் திராவிடமொழி பேசப்பட்டது. ஹரப்பா, மொஹஞ்சதாரோ ஆகிய பகுதிகளில் கிடைத்த எழுத்துக்கள் திராவிட எழுத்துக்களோடு தொடர்புடையன என்கிறார் ஹீராஸ் பாதிரியர். திராவிடம் என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தியர் குமரிலபட்டர். கால்டுவெல் மொழிகளின் அமைப்பு, வேர்ச்சொல் இவற்றை அடிப்படையாகக் கொண்டு திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை 1856ல் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார். திராவிட மொழிக்குடும்பத்தை அவை பேசப்படும் பகுதிகளை அடிப்படையாகக் கொண்டு தென் திராவிட மொழிகள், நடு திராவிட மொழிகள், வட திராவிட மொழிகள் என்று மூவகையாகப் பிரிக்கலாம். 

திராவிட மொழிக்குடும்பம்

1)தென் திராவிட மொழிகள் (9) - பேசப்படும் பகுதிகள்

*தமிழ் - தமிழகம், மலேசியா, சிங்கப்பூர், பிஜித்தீவு, இலங்கை,                                              இந்தோனேசியா, தாய்லாந்து, மொரிசியஸ் 

*மலையாளம்- சேரநாடு 

*கன்னடம் - கர்நாடகம்

*படகா - நீலகிரி (ஊட்டி, குன்னூர்) * துளு-மைசூர் மாநிலத்தை அடுத்த                                சந்திரகிரி, கல்யாண்புரி என்ற 2 ஆறுகளுக்கு இடைப்பட்ட பகுதி. 

*தோடா- தோடர் பழங்குடிமக்கள் (நீலகிரி)

* கோடா - கோடர் இன மக்கள் (நீலகிரி) 

*இருளா -இருளர் மக்கள் (நீலகிரி)

 *குடகு (அ)கொடடு - குடகு மலைப்பகுதி மக்களால் பேசப்படுகிறது.

2) நடுதிராவிட மொழிகள்

*தெலுங்கு- குவி கிளை :கோண்டி, கோண்டா,குயி,குவி,பெங்கோ,மண்டா

*கொலமி- நாயக்கி கிளை : நாயக்கி, பர்ஜி, கடபா ஒல்லாரி, கடபா z                                                                            சில்லூர்

3)வடதிராவிட மொழிகள்

 குரூக்,மால்டோ, பிராகுயி.

தென் திராவிட மொழிகள்

தமிழ்

    தமிழ்மொழி 2,500 ஆண்டுகள் பழமையான இலக்கியங்களை கொண்டது. தமிழ் என்ற சொல்லின் பொருள் இனிமை, எளிமை, நீர்மை என்பதாகும். இலங்கை, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தமிழ் ஆட்சிமொழியாக உள்ளது. 2004ல் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. 'பக்தியின் மொழி' என்று அழைக்கப்படுகிறது. C R. ரெட்டி தமிழ்மொழியைத் திராவிடர்களின் புனித மொழி என்கிறார். பிறமொழித் துணையின்றி தனித்தியங்கும் ஆற்றல் உடையது தமிழ்மொழி என்கிறார் கால்டுவெல். தமிழ்மொழி ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக அதிக மென்பொருளைக் கொண்டுள்ளது. தமிழ் மிகவும் பண்பட்ட மொழி என்றும் அது உயரிய இலக்கியச் செல்வங்களைப் பெற்றிருக்கும் மொழி என்றும் மாக்சுமுல்லர் கூறுகிறார். தமிழ் இலக்கணம் படிக்க படிக்க விருப்பத்தை உண்டாக்குகிறது என்கிறார் கெல்லட் என்ற அறிஞர்.

மலையாளம்

            கேரளாவில்  அதிகமாக பேசப்படும் மொழி மலையாளம். மலையாள மொழியை முதலில் ஆராய்ந்தவர் கால்டுவெல். இம்மொழியில் 12 வட்டார வழக்குகள்  உள்ளன. அவற்றில் திருவிதாங்கூர், கோட்டயம், திரிசூர், மலபார் குறிப்பிடத்தக்கன. மலையாளத்தின் முதல் இலக்கண நூல் லீலாத்திலகம். 

கன்னடம்

    கர்நாடக மாநிலத்தில் பேசப்படும் மொழி கன்னடம். இம்மொழி 2008ல் செம்மொழித்  தகுதி பெற்றது. 3.6 மில்லியன் மக்கள் இம்மொழியைப் பேசுகின்றனர். இதன் எழுத்து முறை தெலுங்கு மொழி எழுத்துமுறையை ஒத்துள்ளது. பழைய கன்னட மொழியில் ழ,ற,ன ஆகிய தமிழ் எழுத்துக்கள் உள்ளன. 13 உயிரெழுத்துக்கள் உள்ளன. இதனை 'ஸ்வர' என்று அழைப்பர். இதில் 2 எழுத்துக்கள் பாதி உயிரழுத்து பாதி மெய்யெழுத்தாக அமைகிறது. இதை 'யோகவாஹா' என்றழைப்பர். 

துளு (அ) துளுவம்

கர்நாடக மாநிலத்தின் தெற்குப்பகுதி, உடுப்பி, கேரளாவின் காசர்கோடு ஆகிய பகுதிகளில் வாழும் மக்கள் துளு மொழியைப் பேசுகின்றனர். எழுத்து, வரிவடிவம் கன்னடமொழியைச் சார்ந்தது.

நடுதிராவிட மொழிகள்

தெலுங்கு (தெலுகு)

ஆந்திரம், தெலுங்கானா மாநிலங்களில் பேசப்படுகிறது.இந்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 22 மொழிகளுள் தெலுங்கு மொழியும் ஒன்று. உலக அளவில் அதிக மக்களால் பேசப்படும் மொழிகளில் 13வது இடத்தில் உள்ளது. 93 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. 

கோண்டி

மத்திய பிரதேசம், ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் இம்மொழி பேசப்படுகிறது. 20 இலட்சம்  மக்கள் இம்மொழியைப் பேசுகின்றனர். கோண்டு இனத்தவரின் தாய்மொழியாக இம்மொழி உள்ளது. 

கோண்டா

ஆந்திர பிரதேசத்தின் எல்லைப் பகுதிகளான விஜயநகரம், ஸ்ரீசைலம், கோதாவரி, ஒரிசா போன்ற பகுதிகளில் வாழும்  பழங்குடியினர் இம்மொழி பேசுகின்றனர். இம்மொழியின் இலக்கண அமைப்பை பி.எச் கிருஷ்ணமூர்த்தி ஆய்வு செய்துள்ளார்.

கூயி 

இம்மொழி ஒரிசாவில் பேசப்படுகிறது. 6 இலட்சம் மக்கள் பேசுகின்றனர்.கோண்டு இன மக்களால் பேசப்படுகிறது.

பெங்கோ

இது ஒரு தனிமொழி என்று பேராசிரியர் பரோ கூறுகிறார். 1300 பேர் இம்மொழி பேசுகின்றனர்.

வடதிராவிட மொழிகள்

பிராகுயி

பலுச்சிஸ்தான் பகுதியில் பேசப்படுகிறது. இம்மொழி பாரசீக மொழியுடன் தொடர்புடையது. ஈரானிய மொழியின் தாக்கம் இம்மொழியில் உள்ளது. 

குரூக்

'ஒரோவன்' என்பது இம்மொழியின் வேறு பெயராகும். பீகார், அசாம், ஒரிசா, ஜார்கண்ட், வங்காளதேசம் போன்ற பகுதிகளில் இம்மொழி பேசப்படுகிறது. வங்காள மக்களின் வரலாறு என்ற நூலில் குரூக் மொழி பற்றிய குறிப்பை கர்னல் டால்டன் எழுதியுள்ளார். வங்காளதேசத்தில் பேசப்படும் திராவிடமொழி குரூக்.

மால்டோ

'இராஜ்மகால்' என்றும் இம்மொழி அழைக்கப்படுகிறது. தேவநாகரி எழுத்துக்களால் எழுதப்படுகிறது. 1884ல் மால்டோ மொழி அறிமுகம் என்ற நூலை எர்னஸ்ட் ட்ரோயெஸ்  எழுதினார்.


No comments:

Post a Comment