Saturday, October 7, 2023

தமிழ் செவ்விலக்கியங்கள்

    தமிழ் செவ்விலக்கியங்கள்

செய்வியல்

        தமிழில் செவ்வியல் என்பதன் மூலச்சொல் செம்மை என்பதாகும். செம்மை, இயல் என்ற இரு சொற்கள் இணைந்து செவ்வியல் என்ற சொல் உருவானது. செம்மை என்பதற்குச் செப்பம், செவ்வை, செவ்வி, ஒழுங்குபடுத்துதல், பண்படுத்துதல் என்றெல்லாம் பொருள் கொள்ளலாம். 

செவ்வியல் இலக்கியங்கள்

       ‌ பழமையும் இலக்கிய, இலக்கணப் பாரம்பரியமும் உள்ள மொழிகளே செவ்வியல் மொழிகள் என்றும், செவ்வியல் இலக்கியங்களைப் பெற்றிருக்கும் பழைமையான மொழிகளே செவ்வியல் மொழிகள் என்றும் கூறலாம்.

           ஒரு மொழி நிலைத்து நிற்பதற்கு அதன் பழமையும் வளமையும் மட்டும் போதாது. அம்மொழி பேச்சு மொழியாக, எழுத்து மொழியாக, ஆட்சி மொழியாக, நீதிமன்ற மொழியாக, பயிற்று மொழியாக நிலை பெற்றிடல் வேண்டும். இலக்கிய வளம், இலக்கண அரண், மிகுந்த சொல்வளம், வரலாற்றுப் பின்னணி, தனித்தியங்கும் மாண்பு, காலத்திற்கேற்ற புதுமை எனப் பல வகைகளிலும் சிறப்பு பெற்றிருத்தல் வேண்டும். தமிழுக்கு இவை அனைத்தும் பொருந்தும். எழுத்து உருவான பின்னரே ஒரு மொழி முழுமை அடைகிறது. அதன் பின்னரே அது வளர்ந்து செழுமையுற்றுச் செவ்வியல் இலக்கியங்களைப் படைக்கும் திறன் பெறுகிறது. தமிழ், சீனம், சமஸ்கிருதம், இலத்தீன், ஹீப்ரு, கிரேக்கம் போன்ற செவ்வியல் மொழிகள் அனைத்தும் எழுத்து வடிவத்தைப் பெற்ற பின்னரே செவ்வியல் இலக்கியங்கள் உருவாங்கின.

தமிழ் செவ்விலக்கியங்கள்

              உலக மொழியியல் அறிஞர்கள் சங்ககால இலக்கியங்களைச் செவ்வியல் இலக்கியங்களாக ஏற்றுக்கொண்டுள்ளனர். சங்க இலக்கியங்களிள் காலம் கி.மு 6ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2ஆம் நூற்றாண்டு வரை என்பர். சங்கச் செவ்வியல் காலத் தமிழ்ச் சமூகம் பல துறைகளிலும் உயர் வளர்ச்சி அடைந்த ஒரு சமூகமாக இருந்துள்ளது. தனித்தன்மை, தூயநிலை, செப்பமான ஒழுங்கு, சிறப்பான பொருள் புலப்பாடு எனப் போற்றத் தருத்த பண்புகள் எல்லாம் நிறைந்திருந்ததால் தமிழைச் செந்தமிழ் என்றும், தமிழ் இலக்கியங்களைச் செவ்வியல் இலக்கியங்கள் என்றும் அழைத்தனர்.

                   தமிழ் செவ்வியல் நூல்களின் எண்ணிக்கை 41. அவை, தொல்காப்பியம், இறையனார் களவியல் உரை, எட்டுத்தொகை (8 நூல்கள்), பத்துப்பாட்டு (10 நூல்கள்), பதினெண்கீழ்க்கணக்கு(18 நூல்கள்), சிலப்பதிகாரம், மணிமேகலை முத்தொள்ளாயிரம். எட்டுத்தொகை, பத்துப்பாட்டு இரண்டும் பாட்டுத்தொகை என்றும் சங்க இலக்கியம் என்றும் பதினெண்மேற்கணக்கு நூல்கள் என்றும் அழைக்கப்படுகிறன. 

எட்டுத்தொகை - நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல் 

பத்துப்பாட்டு - திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, கூத்தராற்றுப்படை, குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை, நெடுநல்வாடை, மதுரைக்காஞ்சி


பதினெண்கீழ்க்கணக்கு- திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, திரிகடுகம், ஏலாதி, ஆசாரக்கோவை, முதுமொழிக்காஞ்சி, பழமொழி நானூறு, சிறுபஞ்சமூலம், ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை, கார்நாற்பது, களவழி நாற்பது.

சங்கு இலக்கியங்களே செவ்வியல் இலக்கியங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

சங்க காலம்

          சங்கம் வைத்துத் தமிழ்மொழியை வளர்த்த காலத்தைச் சங்க காலம் என்பர் கி.மு.500 முதல் கி.பி.300 வரையில் சங்கி காலம் என்று அழைக்கப்படுகிறது. இக்காலகட்டத்தில் தோன்றிய இலக்கியங்கள் சங்க இலக்கியங்கள் என்று அழைக்கப்படுகின்றன. சங்கப்பாடல்களின் எண்ணிக்கை 2381.  இவற்றுள் அகத்திணைப் பாடல்கள் 1862, புறத்திணைப் பாடல்கள் 519, சங்கப்புலவர் எண்னிக்கை 473, பெண்பாற்புலவர்களின் எண்ணிக்கை 49, அதிக பாடல்களைப் பாடியவர் கபிலர் (235 பாடல்கள்).

நற்றிணை

           நற்றிணை 9 அடி சிற்றெல்லையும் 12 அடி பேரெல்லையும் கொண்டது. 400 பாடல்களைக் கொண்ட நூல். இதனால் நற்றிணை நானூறு என்றும் அழைக்கப்படுகிறது. இந்நூலை தொகுப்பித்தவர் பன்னாடு தந்த  மாறன்வழுதி. பின்னத்தூர் நாராயாணசாமி ஐயர் உரையே நற்றிணைக்கு முதல் உரை ஆகும்.

குறுந்தொகை

                     குறுந்தொகை பாடல்கள் 4 அடி சிற்றெல்லையும் 8 அடி பேரெல்லையும் கொண்டது. இந்நூலைத் தொகுப்பித்தோன் பூரிக்கோ. 400 பாடல்களைக் கொண்டது. இவற்றுள் 236 பாடல்கள் பல்வேறு இடங்களில் மேற்கோள்களாக எடுத்தாளப்பட்டுள்ளன.

 ஐங்குறுநாறு

                    குறுகிய அடிகளைப் பெற்று திணைக்கு நூறு பாடல்களாக ஐந்நூறு பாடல்களுடன் அமைந்துள்ளமையால் ஐங்குறுநாறு எனும் பெயர் பெற்றது. இந்நூல் 3 அடி சிற்றெல்லையும் 6 அடி பேரெல்லையும் கொண்டது. பாடிய புலவர்கள் 5 பேர். மருதத்திணை பாடல்களைப் பாடியவர் ஓரம்போகியார், நெய்தல்திணை பாடல்களைப் பாடியவர் அம்மூவனார், குறிஞ்சித்திணை பாடல்களைப் பாடியவர் கபிலர், பாலைத்திணைப் பாடல்களைப் பாடியவர் ஒதலாந்தையார், முல்லைத்திணை பாடல்களைப் பாடியவர் பேயனார். இந்நூலைத் தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர் கிழார், தொகுப்பித்தவர் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஆவர்.

கலித்தொகை

                இந்நூல் கலிப்பாவால் ஆனது. இதனைக் கற்றறிந்தார். ஏத்தும் கலி எனவும், கல்விவல்லார் கண்ட கலி எனவும் சிறப்பிப்பர். கலித்தொகை 150 பால்களைக் கொண்டது. பாலைத்திணைப் பாடல்களைப் பெருங்கடுங்கோ பாடியுள்ளார். குறிஞ்சித்திணை பாடல்களைக் கபிலர்  பாடியுள்ளார். மருதத்திணை பாடல்களை மருதன் இளநாகனார் பாடியுள்ளார். முல்லைத்திணை பாடல்களை சோழன் நல்லுருத்திரன் பாடியுள்ளார். நெய்தல்திணை  பாடல்களை நல்லந்துவனார் பாடியுள்ளார். அடிவரையறை - 11 அடி முதல் 80 அடி வரை.

அகநானுாறு

               சிற்றெல்லை 13 அடி பேரெல்லை 31 அடி. அகநானூறு நீண்ட அடியால் நெடுந்தொகை நானூறு எனும் பெயர் பெற்றது. இந்நூலைத் தொகுப்பித்தவர் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி, தொகுத்தவர் மதுரை உப்பூரிக்குடிக்கிழார் மகனார் உருத்திரசன்மனார். 400 பாடல்களில் 1 முதல் 120 வரையுள்ள 120பாடல்கள் களிற்றியானை நிரை எனவும், 121 முதல் 300 வரையுள்ள  180 பாக்களை மணிமிடை பவளம் எனவும், 301 முதல் 400 வரையுள்ள 100 பாடல்கள் நித்திலக்கோவை எனவும் பாகுபாடு செய்துள்ளனர். 

புறநானூறு

       புறம் பற்றிய நானூறு பாடல்களைக் கொண்டது. இந்நூல் தமிழகத்தின் பல்வேறு புலவர்கள், பல்வேறு சூழல்களில் பாடிய பாடல்களின் தொகுப்பு. இப்பாடல்களைப் பாடிய புலவர்கள் 157. தமிழகத்தின் பண்டைய வரலாற்றை அறிய வரலாற்று மூலங்கள் குறைந்த நிலையில் வரலாற்றுப் பெட்டகமாகப் புறநானூறு விளங்குகிறது.

பதிற்றுப்பத்து

                      சேர வேந்தர் பதின்மர் பற்றிய நூல். பாடாண் திணையில் மட்டுமே பாடல்கள் அமைந்துள்ளது. பத்து சேர மன்னர்களையும் பத்து பத்தாக நூறு   பாடல்களில் புகழ்கின்றது. முதற்பத்தும் இறுதி பத்தும் கிடைக்கவில்லை. 80 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன.  ஒவ்வொரு பாடலிலும் துறை, வண்ணம், தூக்கு, பெயர் தலைப்பு ஆகியவை இடம்பெற்றுள்ளன.

பரிபாடல்

           பரிபாட்டுகளின் தொகுப்பு என்பது பரிபாடலாயிற்று. பரிந்து செல்லும் ஓசையுடைய செய்யுட்களால் அமைந்தது. 80 அடி சிற்றெல்லையும் 400 அடி பேரெல்லையும் கொண்டு  பரிபாடல் அமையும்  என இலக்கணம் கூறுகிறது தொல்காப்பியம். மொத்தம் 70 பாடல்கள். ஆனால் வையை:8 திருமால்:6 முருகன்:8 என்று 22 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன.  பாடியோர் 13 பேர்.

பத்துப்பாட்டு

         பத்துப்பாட்டில் ஐந்து ஆற்றுப்படை நூல்கள் உள்ளன.  குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை அகம் பற்றியன. மதுரைக்காஞ்சி புறம் பற்றியது. நெடுநல்வாடை அகமும் புறமும் சார்ந்து அமைகிறது.

திருமுருகாற்றுப்படை

              பத்துப்பாட்டின் கடவுள் வாழ்த்து போல் திருமுருகாற்றுப்படை அமைகிறது. இப்பாடலை இயற்றியவர் நக்கீரர். இது 317 அடிகளைக் கொண்டது. ஆசிரியப்பாவால் இயன்றது. முருகன் அருள்பெற்ற ஒருவன் அருள் வேண்டும் ஒருவனை ஆற்றுப்படுத்தும் வகையில் புதுமை நோக்கில் அருளுக்காக ஆற்றுப்படுத்துவதாக அமைகிறது திருமுருகாற்றுப்படை. 

பொருநர் ஆற்றுப்படை

          பாடியவர் முடத்தாமக் கண்ணியார் என்னும் பெண்பாற் புலவர். பரிசில் பெற கருதிய பொருநனைப் பரிசில் பெற்ற பொருநன் கரிகால் பெருவளத்தானிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைகிறது. வஞ்சியடிகள் விரவிவந்த நேரிசை ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டுள்ளது. இது 248 அடிகளை உடையது.

சிறுபாணாற்றுப்படை

            பரிசு பெற்ற பாணன் வறுமையில் வாடும் பாணன் ஒருவனை ஒய்மாநாட்டு நல்லியங்கோடனிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைகிறது. 269 அடிகளை உடையது. பாடியவர் நல்லூர் நத்தத்தனார். பாணன் சிறிய யாழை வைத்திருந்தமையால் சிறுபாணாற்றுப்படை எனும் பெயர் பெற்றது.

 பெரும்பாணாற்றுப்படை

                ஆசிரியர் கடியலூர் உருத்திரங்கண்ணனார். 500 அடிகளைக் கொண்டது. இதற்கு பாணாறு என்ற வேறு பெயரும் உண்டு. பாட்டுடைத்தலைவன்  தொண்டைமான் இளந்திரையன் ஆவார். வறுமையால் வாடும் பாணனை இம்மன்னனிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைகிறது.

கூத்தராற்றுப்படை

              பாடியவர் இரணிய முட்டத்து பெருங்குன்றூர்‌ பெருங்கௌசிகனார். பாடபட்ட மன்னன் செங்கண் மாத்துவேள் நன்னன்சேய் நன்னன். பரிசில் பெற்ற கூத்தன் வறுமையில் வாடும் கூத்தனை ஆற்றுப்படுத்துவதால் கூத்தராற்றுப்படை எனும் பெயர் பெற்றது.    மலையை யானைக்கு உவமித்து அதிலிருந்து விழும் அருவியை யானையின் மதநீருக்கு உவமை கூறிச் சிறப்பித்தமையால் இதனை மலைபடுகடாம் என்பர். 583 அடிகள் கொண்டது.

முல்லைப்பாட்டு

      பத்துப்பாட்டுள் குறைவான அடிகளைக் கொண்ட பாடல் முல்லைப்பாட்டு ஆகும்.  இது 103 அடிகளைக் கொண்டு அமைகிறது. பாடியவர் காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார். தலைவன் வரும்வரை ஆற்றியிருந்தமையால் நெஞ்சாற்றுப்படை எனும்  பெயரும் உண்டு.

குறிஞ்சிப்பாட்டு

               இந்நூல் 261 அடிகளைக் கொண்டது. ஆரிய அரசன் பிரகதத்தனுக்குத் தமிழ் அகமரபை அறிவுறுத்த  கபிலர் பாடியுள்ளார். அறத்தொடு நிற்றல் துறையில் அமைகிறது. இதற்கு பெருங்குறிஞ்சி என்ற பெயருமுண்டு என்பர் நச்சினார்க்கினியரும் பரிமேலழகரும்.

பட்டினப்பாலை 

    பாடியவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார். மொத்தம் 301  வரிகள் கொண்டது. வஞ்சி நெடும் பாட்டு என்றும் அழைக்கப்படும். இளம்பூரணர் வஞ்சிப்பா என்பர். காவிரிப் பூம்பட்டினத்தைச் சிறப்பித்துப் பாலைத்திணையைப்  பாடுவதால் இப்பெயர் பெற்றது. பாட்டுடைத் தலைவன் கரிகாலன்.

மதுரைக்காஞ்சி

        இப்பாட்டு பத்துப்பாட்டில் அதிக அடிகளைக் (782 அடிகள்) கொண்டது.  இடையிடையே வஞ்சியடிகள் விரவிவந்த ஆசிரியப்பாவால் ஆனது. ஆசிரியர் மாங்குடி மருதனார். பாட்டுடைத் தலைவன்‌ தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். இளமை, யாக்கை செல்வம் இவை நிலையாமை எனக்கூறி வீடுபேறே நிலைத்தது என முடிக்கிறார்.

நெடுநல்வாடை

நெடுநல்வாடை - நெடிதாகிய நல்வாடை : வேறு தொழிலின்றித் தலைவனையே நினைக்கும் தலைவிக்கு நெடிதாகவும் துன்பமாகவும், கடமை மேற்சென்ற தலைவனுக்கு நல்லதாகவும் அமையும் வாடை எனவே நெநெல்வாடை ஆயிற்று. 188 அடிகளைக் கொண்டது. பாடியவர் நக்கீரர். பாட்டுடைத் தலைவன்  பாண்டியன் நெடுஞ்செழியன். 

நெடுநல்வாடையின் சிறப்புக் கருதி திரு.வி.க. "நெடுநல்வாடை ஒரு பெருஞ்சுரங்கம்; நக்கீரர் கண்ட சுரங்கம், தமிழ்ச் சுரங்கம்" எனப் பாராட்டுவார்.